பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 02:06
பெரியபட்டினம்; பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தினை 20க்கும் மேற்பட்டோர் சுமந்து வந்தனர். 15 குதிரைகள் நாட்டியமாட, மேளதாளங்கள் முழங்க ஒட்டகத்தின் மீது பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வரப்பட்டது. மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்காவில் மூன்று முறை குதிரைகள், ஒட்டகம் மற்றும் ரதம் ஊர்வலம்வந்தது ரகத்திற்குள் சந்தன குடங்கள் மற்றும் தென்னம் பிள்ளைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை 6:50 மணிக்கு 70 அடி உயரமுள்ள கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்காக மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது. மகான் செய்யதலி ஒலியுல்லா தர்காவில் பச்சை வண்ண போர்வை போர்த்தி மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வருகிற ஜூன் 23 அன்று மாலை சந்தனக்கூடு விழா துவங்கி மறுநாள் ஜூன் 24 திங்கட்கிழமை அன்று அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவிற்கு கொண்டுவரப்படுகிறது. பகல் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 3 அன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.