பதிவு செய்த நாள்
15
ஜூன்
2024
04:06
ராமேஸ்வரம்; ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
ராமாயணம் வரலாற்றில், இலங்கை மன்னன் ராவணன் சிறைபிடித்து சென்ற சீதையை மீட்க தனுஷ்கோடி கடற்கரையில் ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சீதையை விடுவிக்கும்படி அண்ணன் ராவணனிடம் தம்பி விபீஷணர் வலியுறுத்தியும் கண்டு கொள்ளாமல், விபீஷணரை அவமரியாதை செய்கிறார். இதனால் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்ட விபீஷணர், அடைக்கலம் தேடி ராமரிடம் வருகிறார். இதனை கண்ட அனுமான், ஒற்றனாக விபீஷணர் வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் ராமபிரான் அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவுவதே தர்மம் எனக் கூறி, தம்பி லட்சுமணரிடம் கடல்நீர் எடுத்து வரக் கூறினார். பின் இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டுகிறார். இதனை நினைவு கூறும் விதமாக ராமேஸ்வரம் கோயிலில் ஜூன் 14ல் துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, இன்று காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், அனுமான் மற்றும் விபீஷணர் புறப்பாடாகி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் சஞ்சீவி ராமாயண வரலாற்றை வாசிக்க, குருக்கள் ராமநாராயணன் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினார். பின் இராமர் வீசினுக்கு மகா தீபாரவனே நடந்தது இதில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார் கமலநாதன், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.