பதிவு செய்த நாள்
15
ஜூன்
2024
03:06
அவிநாசி; திருமுருகன் பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, நாளை காலை ஹஸ்த நட்சத்திரத்தில் காலை 6:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருவெள்ளறை மேலத்திரு மாளிகை ஸௌம்யா நாராயணாச்சார்ய ஸ்வாமிகள்,பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கௌமார மடாலயம் குமரகுருபர ஸ்வாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச ஸ்வாமிகள், கூனம்பட்டி ஆதீனம் இராஜசரவண மாணிக்க சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. அதற்காக நேற்று சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, விமான கலசம் மற்றும் துவார பாலகர்கள் நிறுவுதல் ஆகியவற்றுடன் கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாம் மற்றும் நான்காம் கால யாக பூஜையில் திருவாராதனம், 108 கலசஸ்நபந திருமஞ்சனம், ஆகமஸதோத்ர பாராயணம் ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை ஐந்தாம் கால பூஜையில் மூல மந்திர ஹோமங்கள், ப்ராணப்ரதிஷ்டை, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது. அதன் பின்னர், விமானம் மூலவர் உள்ளிட்ட பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவம், பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சன்னதி வீதியில் மயில் வாகன காட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டினை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அருள்மிகு திருமுருகநாத ஸ்வாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கரி வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.