சபரிமலையில் ரூ.80 கோடியில் அமைகிறது ரோப் கார் : மத்திய வன அமைச்சகம் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 12:06
கம்பம்; சபரிமலையில் ௹ 80 கோடி மதிப்பீட்டில் 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய வன அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது-
தென் மாநிலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் சபரிமலை முக்கிய இடம் பிடிக்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தென் மாநிலங்களில் இருந்து சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். சன்னிதானத்திற்கு தேவைப்படும் பூஜை பொருள்கள் மற்றும் இதர பொருள்களை கொண்டு செல்வதில் கோயில் நிர்வாகத்திற்கு இடர்பாடுகள் இருந்து வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது .
இதற்கென வனத்துறை நிலம் 1.5 ஏக்கர் மட்டுமே தேவைப்படுகிறது. தேவைப்படும் வனப்பகுதி 1.5 ஏக்கருக்கு நஸ்ட ஈடாக வனத்துறைக்கு, வருவாய்த்துறை நிலம் 4.53 எக்டர் சின்னக்கானலில் வழங்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது. வருவாய்த் துறை நிலம், ஏற்கெனவே தேவசம்போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ரோப் கார் செல்லும் பாதையில் 5 இடங்களில் டவர் அமைக்கப்படுகிறது. 40 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரத்திற்கு இந்த டவர்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மொத்தத்திற்கு 20 மரங்கள் மட்டும் வெட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரள மாநில அரசின் மூலம் தேவசம் போர்டு கொடுத்துள்ள இந்த திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுப் புறச் சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ௹.80 கோடியில் அமைக்கப்படும் இந்த ரோப் கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அல்ல என்றும், பொருள்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ௹.80 கோடியில் அமையும் இந்த ரோப் கார் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.