திருமலையில் குவிந்த பக்தர்கள்; திருப்பதி தேவஸ்தான புது நிர்வாக அதிகாரி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 01:06
திருப்பதி; ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு தேர்வானதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். கோவில் புதிய நிர்வாக அதிகாரியாக சியமளா ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருமலை பெருமாளை சந்திக்கவரும் ஒவ்வொரு பக்தரும் திருப்தியுடனும்,மகிழ்ச்சியுடனும் திரும்பிச் செல்லவேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம், அவரது நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படுவதே எனது கடமை என்று செய்தியாளர்களிடம் பேசியவர், பக்தர்கள் காத்திருக்கும் வரிசைப்பகுதிக்கும்,உணவுக்கூடத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேவையான திருத்தங்களைச் சொல்லி நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டார். நான்கு நாட்கள் தொடர்விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்,காத்திருப்பு அறைகள் எல்லாம் நிரம்பிவழிந்து ரோட்டிற்கு வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்தவர் அதில் ஆங்காங்கே சில குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும் உத்திரவிட்டார்.