நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: 4 வடங்கள் அறுந்ததால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2024 10:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் 4 வடங்கள் அடுத்தடுத்து அறுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் தேரோட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது இரும்பு சங்கிலிகளை கொண்டு தேர் இழுப்பதற்கான பணி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்கான விழா, கடந்த 13ம் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து காலை 6:40 மணிக்கு தேரோட்டம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கப்பட்டது. தேரோட்டம் துவங்கியதில் இருந்து மூன்று வடங்கள் அறுந்து புதிய வடம் மாற்றப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தேரோட்டம் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் 4வது வடமும் அறுந்து தேர் மீண்டும் நிறுத்தப்பட்டது. எனவே தற்போது இரும்பு சங்கிலிகளை கொண்டு தேர் இழுப்பதற்கான பணி நடக்கிறது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.