பதிவு செய்த நாள்
21
ஜூன்
2024
12:06
தஞ்சாவூர்; உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயத்தில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் வருகைதந்து கோவிலின் கட்டிட கலையை பார்த்து வியந்து வருகின்றனர், இந்நிலையில் இக்கோவிலில் ஆனிமாதம் ஆண்டுதோறும் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெறும், அதைப்போல் இந்தாண்டும் இவ்விழா மிக சிறப்பாக நேற்று ஜீன் 20 ந் தேதி நடைபெற்றது, சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஸ்ரீ பெருவுடையாருக்கு மாலை மாற்றி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, பட்டு சேலை, பட்டு வேட்டி அணிவித்து, மாங்கல்ய வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்று சிறப்பு மஹா தீபாரதனை மற்றும் சோடஷ உபகாரங்கள் காட்டப்பட்டது, முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை நால்வர் சன்னதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர், இத்திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமணத்தடை, ஸர்பதோஷம், சந்தான பிராப்தி,நீண்ட ஆயுள், மாங்கல்ய தோஷம் நீங்கி உலக மக்கள் நலம் பெறுவர் என்பது ஐதீகம்,இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.