பதிவு செய்த நாள்
24
ஜூன்
2024
11:06
சத்ரபதி சாம்பாஜிநகர்; மஹாராஷ்டிராவில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வின்போது, பழங்கால சேஷசயன விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
மஹாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டம் சிந்த்கேத் ராஜா பகுதியில், தொல்லியல் துறையினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது, பூமியில் ஒரு கோவிலின் கட்டுமானங்கள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து, அங்கு தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 7 அடி ஆழத்தில், மிகப் பெரிய, மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ள, சேஷசயன விஷ்ணு சிலையை அவர்கள் கண்டெடுத்தனர். 5.58 அடி நீளமும், 3.30 அடி உயரமும் உள்ளது அந்தச் சிற்பம். அதில் விஷ்ணு, ஆதிசேஷன் பாம்பின் மேல் துயில் கொண்டுள்ளார். அவரது காலை, லட்சுமி பிடித்து விடுகிறார். இதைத் தவிர, தசாவதாரங்கள், அமிர்தத்தை கடைவது உட்பட பல புராணங்களை விளக்கும் அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற நேர்த்தியான சிலைகள் பொதுவாக தென் மாநிலங்களிலேயே வடிவமைக்கப்படும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சிலை எந்த காலத்தைச் சேர்ந்தது, அந்தப் பகுதியில், பூமிக்கு அடியில் பெரிய கோவில் இருந்ததா என்பது தொடர்பான ஆய்வு கள் நடந்து வருகின்றன.