பதிவு செய்த நாள்
02
ஜூலை
2024
12:07
மேற்கு மாம்பலம்; மேற்கு மாம்பலத்தில் உள்ள, 80 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவிலை, ‘ஜாக்கி’ வாயிலாக 5 அடிக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு மாம்பலம், கே.ஆர்.கோவில் தெருவில், 80 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கடந்த 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், சாலை மட்டத்தில் இருந்து, 2 அடி தாழ்வாக உள்ளது. இதனால், மழைக்காலத்தில் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, விநாயகர் இறை பணி சேவா டிரஸ்ட் சார்பில், கோவிலை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ள கோவிலை, ‘ஜாக்கி’ வைத்து, 5 அடி உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து, கோவில் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிக்கு 35 லட்சம்ரூபாய் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ‘விநாயகர் இறை பணி சேவா டிரஸ்ட்’ சார்பில், உபயதாரர்களிடம் இருந்து நிதி திரட்டி, பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கோவில் அருகே உள்ள கிணற்றை துார் வாரி, அதில் உள்ள தண்ணீரை கோவில் தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் புனரமைப் பிற்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் 98406 14355 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.