பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
ஓசூர்: ஓசூர் அருகே, நூறு ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வறுமையால், ஒரு கிராமத்தினர், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, தீபாவளியை கொண்டாடுகின்றனர். அந்த பாராம்பரிய வழக்கத்தை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்தாண்டு தீபாவளியை கொண்டாடாமல், இந்த ஆண்டு தீபாவளியை கொண்டடி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பழைய குருபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் ஆடுவளர்ப்பு, விவசாய தொழிலில் ஈடுபடுகின்றனர்.குருபட்டி கிராமத்தில் கடந்த காலத்தில் உள்ளூரை சேர்ந்த பூர்வீக மக்கள் மட்டுமே வசித்தனர்.
தற்போது, ஓசூர் நகர வளர்ச்சி, தொழிற்சாலை பெருக்கத்தால் வெளியூர் மக்கள் அதிகளவில் குடியேறி உள்ளனர்.இவர்கள் வசிக்கும் பகுதி, புதுகுருப்பட்டியாக மாறியுள்ளது. ஆனால், பழைய குருப்பட்டி இன்னும் கிராம பகுதியாகவே உள்ளது. பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.பழைய குருப்பட்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையின் போது, நூறு ஆண்டுக்கு முன், கடும் பஞ்சம் ஏற்பட்டது.சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டனர். மேலும், மர்ம நோயால் பலர் பலியாகினர். அப்போது, அப்பகுதி மக்களால் தீபாவளியை கொண்டாட முடியவில்லை.
ஆனால், அந்த ஊரை சுற்றியுள்ள அச்செட்டிப்பள்ளி, மத்திகிரி, கெலமங்கலம் பகுதியில் தீபாவளியை விமர்ச்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால், குருப்பட்டி கிராம மக்கள் விரக்கதியடைந்தனர்.அதன் பின், வறுமையின் பிடியில் இருந்து ஓரளவு மீண்ட பழைய குருப்பட்டி கிராம மக்கள், ஒன்று கூடி முடிவு எடுத்தனர். அதன்படி, தங்கள் வாழ்க்கைக்கு மிகுந்த அச்சுறுத்தலையும், பீதியையும் ஏற்படுத்திய அந்த தீபாவளி நாளை நினைவு கூறும் வகையில், ஒரு ஆண்டு விட்டு, ஒரு ஆண்டு தீபாவளியை கொண்டாட முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை, நூறு ஆண்டுக்கு மேலாக, பழைய குருப்பட்டி கிராம மக்கள், இரு ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு இப்பகுதி மக்கள், பட்டாசு வெடிக்காமல், புத்தாடை அணியாமல், இனிப்பு பலகாரங்கள் செய்யாமல் தீபாவளியை கொண்டாடவில்லை. நேற்று இப்பகுதி மக்கள், தீபாவளியை சென்ற ஆண்டுக்கும் சேர்த்து விமர்ச்சையாக கொண்டாடினர். அனைத்து குடும்பத்தினரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, குழந்தைகளுடன் மகிழ்ந்தனர்.