தேசிய ஹிந்து வாரியம் அமைக்க வேண்டும் உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 12:07
பெரம்பலுார்:-ஹிந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ திருமேனிகளை மீட்பதற்கும், ஹிந்துக்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்கும் தேசிய ஹிந்து வாரியம் அமைக்கப்பட வேண்டும் என, உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவயோகி அனுகூலநாத ராஜசேகரன் தெரிவித்தார்.
பெரம்பலுாரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்து கோவிலையும், கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ திருமேனிகளை மீட்பதற்கும், ஹிந்துக்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்கும், தேசிய ஹிந்து வாரியம் அமைக்கப்பட வேண்டும். திருவண்ணாமலை சுற்றியுள்ள கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுவதுமாக கிரிவல பாதைக்கான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லுகின்ற சாலை போக்குவரத்தில் கிரிவலப் பாதை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கிரிவலப் பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் வர வேண்டும் என்பது பக்தர்களின் கருத்து. தேர் திருவிழாக்களில் தேரோடும் வீதிகளில் தரமான சாலைகள் அமைத்து தேர் தடவாளங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு தேர் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் பெரும்பாலான நிதி பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. முறையான ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். திருப்பணிகள் செய்வதிலும் கும்பாபிஷேகம் செய்வதிலும் கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒருவேளை அன்னதானத் திட்டத்தில் வசூலிக்கப்படும் நிதியை முறைப்படுத்தி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி செய்ய வேண்டும். கட்டணமில்லா தரிசனத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒரு கால பூஜை கூட நடக்காத கோயிலில் பூஜைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் பணி செய்யும் ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிவாலயங்களில் சிவனடியார்கள் முற்றோதல் செய்வதற்கும், உழவாரப்பணி செய்வதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.