புரி ஜெகன்நாதர் கோவில் பொக்கிஷ அறையை திறக்க புதிய கமிட்டி அமைத்தது ஒடிசா அரசு
பதிவு செய்த நாள்
06
ஜூலை 2024 12:07
புவனேஸ்வர், ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறையை திறந்து, அங்குள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுக்கவும், மராமத்து பணிகளை கண்காணிக்கவும் புதிய உயர்மட்ட கமிட்டியை மாநில அரசு அமைத்துள்ளது. பல ஆண்டுகள்; ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புரியில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஜென்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில் விலை உயர்ந்த வைர, வைடூரியங்கள், தங்க நகைகள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த பொக்கிஷ அறையின் உட்பகுதி பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறந்து அங்குள்ள நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுக்க வேண்டும் என, பா.ஜ., பிரமுகர் சமிர் மொஹான்டி, ஒடிசா உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த பணிகளை கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்ட கமிட்டியை அமைத்தது. ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னர் அமைக்கப்பட்ட கமிட்டி கலைக்கப்பட்டது. வழிமுறை; இப்போது, ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத் ரத் தலைமையில், 16 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையின் உள் அறையை திறக்கும் தேதி, அங்குள்ள பொருட்களை கணக்கெடுப்பது மற்றும் மராமத்து பணிகளுக்கான வழிமுறைகளை வகுப்பது குறித்து இந்த கமிட்டி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில அரசு தெரிவித்துஉள்ளது.
|