பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
01:07
மறைமலை நகர்; சிங்க பெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தில், பழமையான தண்டுமாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்த, கிராம மக்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 5ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை, கூழ்வார்த்தல் மற்றும் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாலை அணிந்து விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி தீ திமித்தனர். அம்மன் வேடமிட்டும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில், தெள்ளிமேடு, வெங்கடாபுரம், கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.