பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
12:07
கர்நாடகா, ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். இங்கு மன்னர் காலத்து கோவில்கள் ஏராளம் உள்ளன. மன்னர்கள் காலத்தில் கட்டட, கலை நயத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல கோவில்கள் அமைந்துள்ளன. அந்த கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள், கட்டட கலையை கண்டு மெய்சிலிர்த்து நின்று விடுவர். இப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று தான், வீர நாராயணா கோவில். சிக்கமகளூரு தாலுகா, பெலவாடி கிராமத்தில் உள்ளது வீர நாராயணா கோவில். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், ஹொய்சாளர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
இக்கோவிலின் கூரையில் கிருஷ்ணரை பற்றியும், ஹிந்து புராணங்களை பற்றியும் சிற்பம் பொறிக்கப்பட்டு உள்ளது. பாண்டவர்களில் ஒருவரான பீமன், பகாசுரன் என்ற அரக்கனை கொன்று மக்களை பாதுகாத்த இடமாகவும் பெலவாடி கிராமம் விளங்குகிறது. கோவில் கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு யோக நரசிம்ம சாமி சன்னதிகளுடன் கூடிய மண்டபம் சேர்க்கப்பட்டு கோவில் விரிவுபடுத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டடக் கலையை பார்த்து மெய்சிலிர்த்து போவதுடன், மொபைல் போன்களில் உற்சாகமாக ‘செல்பி’யும் எடுத்துக் கொள்கின்றனர். கோவில் தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர் சிக்கமகளூரு சென்று அங்கிருந்து செல்லலாம். பெங்களூரில் இருந்து கோவில் 222 கி.மீ., துாரத்தில் உள்ளது.