பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
04:07
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் எனும் திருப்பெருந்துறையில் ஸ்ரீஆத்மநாதர்சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலாகும். மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தேரோட்டம், மார்கழி மாதம் திருவாதிரை தேரோட்டம் என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல, இந்த ஆண்டு இக்கோவிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலை 10:00 மணிக்கு, ஆனி மஞ்சன தேர் திருவிழாவாக, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருள செய்தனர். சிவனடியார்களும், சிவாச்சாரியார்களும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களை பாட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின், நிலையை அடைந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.