பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
05:07
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் சந்தனகாப்பு அலங்காரத்தில் நடராஜப் பெருமான் எழுந்தருளி அருள்பாலித்தார்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே நடராசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இங்கு மார்கழி மாதம் திருவாதரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் , ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் முக்கியமானதாகும். தற்போது கோயிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை நடராஜருக்கு நவ கலசங்கள் வைத்து ஜபம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சந்தனம், இளநீர், பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடராஜருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்று நடராசப் பெருமானை தரிசித்தனர். மாலை அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தருடன், ஞானாம்பிகை சமேத நடராசர் வீதி உலா வந்தார்.