பதிவு செய்த நாள்
13
ஜூலை
2024
10:07
திருச்சூர்; கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நான்கு கோவில்களை ஆடியில் ஒரே நாளில் தரிசிக்கும் ‘நாலம்பல தரிசனம்’(நான்கு கோவில் தரிசனம்) என்னும் நிகழ்ச்சி ஜூலை 16 ல் துவங்கி ஆக.,16 வரை நடக்கிறது.
கேரளாவில் ஆடி மாதம் ‘ராமாயண மாதம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில், ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கும் சகோதரர்களான ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய தெய்வங்களை ஒரே நாளில் தரிசிப்பது எல்லா செல்வங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை. இதனை ‘நாலம்பல தரிசனம்’ என்று அழைக்கின்றனர். திருச்சூர் அருகே திர்பிறயாரில் ராமருக்கு (அயோத்தி பிரதிஷ்டைக்கு முன்பு பிரதமர் மோடி தரிசித்த இடம்), இரிஞாலக்குடா கூடல் மாணிக்கத்தில் பரதனுக்கு, மூழிக்குளத்தில் லட்சுமணருக்கு, பாயம்மல் என்ற இடத்தில் சத்ருக்கனனுக்கு கோவில் உள்ளது. திருச்சூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் திர்பிறயார் கோவில் உள்ளது. அங்கிருந்து இந்த ஒரே நாள் ஆன்மிக தரிசன பயணத்தை துவக்கி, திருச்சூரில் இருந்து 27 கி.மீ.,துாரத்தில் உள்ள பாயம்மலில் முடிக்க வேண்டும். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.,) சார்பில் நான்கு கோவிலுக்கும் சென்று வர பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆடி மாதத்தில் நான்கு கோவில்களும் அதிகாலை 4:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். மேலும் விபரங்களை அறிய திர்பிறயார் 0487-239 1375, இரிஞாலக்குடா 0480-282 6631, மூழிக்குளம் 0484-247 0374, பாயம்மல் 0480-329 1396 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.