பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
03:07
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆனி மாத கடைசி திருமண முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்தனர். இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் நெரிசலில் ஏற்பட்டதால் பக்தர்கள் நடந்து செல்லவும் கடும் சிரமப்பட்டனர். இதுதவிர திருத்தணி நகரத்தில் ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளிலும் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கண்ட சாலையில் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். மேலும்,மலைக்கோவில் தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இம்மாதம், 27 ம் தேதி முதல், 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா என்பதால் கூட்ட நெரிசலில் காவடிகள் எடுப்பது சிரமம் என்பதால் சில பக்தர்கள் நேற்று காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.