பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
04:07
என் கடன் கோவில்களை சுத்தம் செய்வதே என்று கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ராமஜெயம், பதினைந்து வருடங்களுக்கு முன் கோவிலுக்கு சாமி கும்பிடப்போவதோடு சரி.
நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் உழவாரப்பணியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார், ஒரு தொண்டனாய் இருந்து கோவிலைச் சுத்தம் செய்யும் பணி மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதன்பின் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபாடுகாட்ட ஆரம்பித்தார், ஸ்ரீ ஜெகத்குரு சேவாஸ் என்ற அமைப்பினைத் துவங்கி உழவாரப்பணியை பிரதானப்பணியாக தொடர்ந்தார், இந்த அமைப்பில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக் கொள்ளலாம், எவ்வித உறுப்பினர் கட்டணமும் கிடையாது. தலைவரான ராமஜெயம் சம்பந்தப்பட்ட கோவிலில் அனுமதி பெறுவது உள்பட அனைத்தையும் முறைப்படி செய்துவிட்டு அந்த மாதம் எந்த கோவிலில் உழவாரப்பணி என்பதை முன்கூட்டியே வாட்ஸ்அப் செயலி மூலமாக தெரிவித்துவிடுவார்.,உறுப்பினர்கள் அங்கு வந்துவிடுவர்.
இப்படி இதுவரை தமிழகத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட கோவில்களில் உழவாரப்பணி மேற்கொண்டுள்ளனர், தமிழகம் மட்டுமின்றி சபரிமலை ஐயப்பன் கோவிலிலும்,வடக்கே உள்ள சோம்நாத் கோவிலிலும் கூட உழவாரப்பணியை செய்துள்ளனர்.இவர்களது பணியைப் பாராட்டி கவர்னர் ரவி சமீபத்தில் விருதுகொடுத்து பாராட்டியுள்ளார். கடந்த ஞாயிறன்று சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர்,ஆணும் பெண்ணுமாக சுமார் 200 பேர் கோவிலின் மூலை முடுக்கெல்லாம் கூட விடாமல் சுத்தம் செய்தனர், சுவாமி திருவாட்சி, பித்தளை விளக்கு ,உற்சவர் மண்டபம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கோவிலுக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தினர். நீங்களும் இந்த அமைப்பில் உங்களை இணைத்துக்கொண்டு உழவாரப்பணி செய்திட விருப்பமா? தலைவர் ராமஜெயத்தை தொடர்பு கொள்ளவும் எண்:9003700575.
-எல்.முருகராஜ்.