பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
03:07
கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சிகளில், அரிஷினகுன்டே நீர்வீழ்ச்சியும் ஒன்று. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சிறந்த சுற்றுலா தலம் மட்டும் அல்ல, இது ஆன்மிக தலமாகவும் பிரசித்தி பெற்றது. இந்த நீர்வீழ்ச்சிக்கும், கொல்லுார் மூகாம்பிகை அம்பாளுக்கும் இடையே, தெய்வீக தொடர்பு உள்ளது.
கர்நாடகாவின் ஒவ்வொரு நீர்வீழ்ச்சிகளும் தனி சிறப்பு வாய்ந்தவை. உலக பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன. இவற்றில் அரிஷினகுன்டேவும் ஒன்றாகும். இதற்கு ஆன்மிக தொடர்புள்ளது. உடுப்பியின் கொல்லுாரின் அடர்ந்த கானகத்தின் நடுவில் அமைந்துள்ளது. அரிஷினகுன்டே நீர்வீழ்ச்சிக்கும், கொல்லுார் மூகாம்பிகை தேவிக்கும் இடையே தொடர்பு உள்ளது பலருக்கும் தெரியாத விஷயம். தேவர்களையும், பூலோக வாசிகளையும் இம்சித்த மூகாசுரனை வதம் செய்ய, மூகாம்பிகை தேவி அவதாரம் எடுத்தார். மூகாசுரனை வதம் செய்த பின், மூகாம்பிகை உடலில் ரத்தம் கறையாக படிந்தது. இதை போக்கும் நோக்கில், அரிஷினகுன்டே நீர்வீழ்ச்சியில் நீராடியதாக ஐதீகம். அம்பாள் மஞ்சள் தேய்த்து குளித்தார். இதே காரணத்தால் இந்த நீர்வீழ்ச்சிக்கு அரிஷினகுன்டே என, பெயர் ஏற்பட்டதாம். இந்த நீர்வீழ்ச்சி மர்மமானது. இதன் ஆழத்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கோடைகாலத்தில் நீர்வீழ்ச்சி சுற்றிலும் உள்ள பாறைகள், மஞ்சள் நிறத்தில் ஜொலிப்பதை காணலாம். மாலை சூரிய அஸ்தமனமாகும்போது, அரிஷினகுன்டேவில் வானவில் தோன்றுவதை அப்பகுதியினர் கண்டுள்ளனர். அரிஷினகுன்டேவில் இருந்து சவுபர்ணிகா ஆறு உருவாகிறது. இந்த ஆறு கேரள ஹிந்துக்களுக்கு, கங்கையை போன்று புனிதமாக கருதப்படுகிறது. – நமது நிருபர் –