திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; மலர் அலங்காரத்தில் வலம் வந்த மலையப்ப ஸ்வாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2024 10:07
திருப்பதி; ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவார ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது. நேற்று ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளினார். மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை, வஸ்த்திரம், அட்சதை சமர்பித்து நைவேத்தியம் நடைபெற்றது. பின் செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரி சேவையும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் உலா வந்து நான்கு மாட வீதிகளில் உள்ள காட்சியறைகள் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் மற்றும் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், கார்டன் துணை இயக்குனர் ஸ்ரீனிவாசலு, பீஷ்கார் ஸ்ரீ ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.