பதிவு செய்த நாள்
18
ஜூலை
2024
11:07
பெரியகுளம்; கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் உற்ஸவர் அம்மன் வீதி உலா சென்றார்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடந்தது. தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, குதிரை, யானை, மின்விளக்கு, பூப்பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். பழமை வாய்ந்த கவுமாரியம்மன் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்குவதால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று ஆடி 1 முக்கிய திருவிழாவான 10ம் நாள் திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை 12:00 மணிக்கு பக்தர்கள் அக்னிசட்டி எடுக்க துவங்கினர். இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் இரட்டை அக்னிசட்டியும், குழந்தையை தொட்டிலில் கட்டியும், கன்னத்தில் அழகு குத்தி அக்னிசட்டி எடுத்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது சொந்த ஊரான பெரியகுளம் திருவிழாவிற்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஜூலை 23 ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், செயல்அலுவலர் சுந்தரி செய்திருந்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.