பதிவு செய்த நாள்
18
ஜூலை
2024
11:07
திருப்பூர்; ஆடி மாதம் தட்சிணாயணம் பிறந்ததையொட்டி, லட்சுமி நகர் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. தமிழ் வருடத்தில் உள்ள, 12 மாதங்கள், இரண்டு அயணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, தை முதல் ஆனி வரையிலானது உத்தராயணம், ஆடி முதல் மார்கழி வரையிலானது தட்சிணாயணம். சூரியன் வடக்கிருந்து தெற்கு நோக்கி பயணிப்பது தட்சிணாயணம் என்றும், வடக்கு நோக்கி பயணிப்பது உத்தராயணம் என்றும் கூறுகின்றனர். இந்த ஆறு மாதங்கள், தேவாதிதேவர்களுக்கு இரவு பொழுது என்பது ஐதீகம். தட்சிணாயண காலத்தில், பகலில், சூரியன் கதிர்வீச்சு குறைவதால், இரவில் குளிர்ச்சி அதிகரிக்கும். வீட்டில், தேங்காய் பாலை இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடி மாத பிறப்பையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.சிவாலயங்களில், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டனர். திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில், சிவனடியார்கள் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.காலையில், சிறப்பு வழிபாடுடன் துவங்கிய முற்றோதல், அனைத்து பதிகங்களையும் பாராயணம்செய்து, தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.