பதிவு செய்த நாள்
18
ஜூலை
2024
05:07
திருவொற்றியூர்; வடசென்னையின், திருவொற்றியூர் பகுதியில், வடக்கு முகம் நோக்கி, கையில் பிரம்பு, சூலாயுதம் ஏந்தி, ஸ்ரீ காட்டுப் பொன் னியம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பழமை வாய்ந்த இக்கோவிலில், துர்க்கை, பைரவர், கருமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தனி சன்னதிகள் உள்ளன. செவ்வாய், வெள்ளி தினங்களில், இக்கோவிலில் விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம், பவுர்ணமி, அமாவாசை, வெள்ளி கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும், பக்தர்களுக்கு, நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், குழந்தை வரம் வேண்டி, காட்டுப் பொன்னியம்மனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். சுற்றுவட்டார கிராமங்களுக்கு கிராம தேவதையாகவும், வீற்றிருக்கிறார். ஆடி மாதம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு பிரசித்தம். அதன்படி, 57 வது ஆடி திருவிழா, ஆக., 16 ம் தேதி, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
அன்றயை தினமே, தேரடி, ஆலயத்தம்மன் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம், மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகம், மாலையில், திருவிளக்கு பூஜை நடக்கும். தொடர்ந்து, 17 ம் தேதி, பதி அலங்கரிக்கப்பட்டு, பம்பை உடுக்கையுடன் சிறப்பு வழிபாடு பூஜை நடக்கும். 18 ம் தேதி, காலை, அம்மனுக்கு மஹா அபிஷேகம், மதியம், கூழ்வார்த்தல், மாலை, சிறப்பு அலங்காரம், இரவு, கும்பம் போடுதல், அம்மன் திருவீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் கைகூடும்; இக்கோவில் அருகேயே, லஷ்மி சமேத கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மாதம் மற்றும் ராமநவமி விழாக்கள் வெகு விமரிமையாக நடக்கும். திருமண தடை உள்ளவர்கள், கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளை வணங்கி வழிப்பட்டால், விரைவில் திருமண வரம் கைகூடும் என்பது, ஐதீகம்.
முகவரி : ஸ்ரீ காட்டுப் பொன்னியம்மன் நகர், விம்கோ நகர் பின்புறம், திருவொற்றியூர், சென்னை - 19.
நடை திறந்திருக்கும் நேரம் : காலை, 7:00 - 10:00 மணி, மாலை, 5:00 - 8:00 மணி.
வெள்ளிக்கிழமை : காலை, 7:00 - 12:00 மணி வரை திறந்திருக்கும்.
தொடர்புக்கு : கோவிந்தராஜன் - 9790939090