பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
04:07
மேட்டுப்பாளையம்; ஜடையம்பாளையம் புதூரில் உள்ள, மந்தை மாரியம்மன் கோவிலில், நடந்த சுமங்கலி பூஜையில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பன்னிரண்டாம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் அன்னை வேள்வி வழிபாடுடன் சுமங்கலி பூஜை துவங்கியது. 12:00 மணிக்கு அன்னைக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது. 12:00 மணிக்கு அலங்கார ஆராதனையும், பேரொளி வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது. அர்ச்சகர்கள் நாராயணன், கண்ணன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி சரடு, வளையல் ஆகியவை பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பழனிசாமி, ஊர் கவுடர் பார்த்திபன் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜடையம்பாளையம் புதூர் ஊர் கவுடர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.