பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
04:07
சிவகாசி; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் காத்திருக்காமல் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தினார். ஸ்ரீவில்லிபுத்துார் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக. 4 ல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி முகேஷ் ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது; இதில் கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்களுக்கு 6, பெண்களுக்கு 8 என மொத்தம் 14 நிரந்தர சுகாதார வளாகங்களும், 10 கண்காணிப்பு கேமராக்கள், தகவல் தொடர்புக்கு வாக்கி டாக்கிகள், சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மீனாட்சி, பி.டி.ஓ., : மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்படும்.
போக்குவரத்து கழக மேலாளர் ரவிச்சந்திரன்: மதுரை, திருமங்கலம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். டி.எஸ்.பி: போலீசார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சுகாதார துறையினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பிற்காக கூடுதல் கண்காணிப்பு கேமரா மற்றும் சோதனை சாவடி அமைக்க வேண்டும். முதியவர்களுக்கு டோலி ஏற்பாடு செய்ய வேண்டும்.
சப் கலெக்டர்: கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் போதவில்லை என புகார்கள் எழுந்தது. அதனால் இந்தாண்டு கூடுதலாக சுகாதார வளாகம் வேண்டும். சுகாதார வளாகங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்திற்கு தனிக் குழுவை ஏற்படுத்த வேண்டும். கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஜெனரேட்டர் மூலம் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தனியார் இடங்களில் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது. அடிவாரத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலைப்பாதையில் உள்ள மருத்துவ முகாம்களில் ஸ்ட்ரெச்சர் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து அடிவாரப் பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். மலை அடிவாரத்தில் பொருட்கள் வைப்பு அறை ஏற்படுத்த வேண்டும். தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலில் அனுமதி சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தினசரி அப்புறப்படுத்த வேண்டும், என்றார்.