பதிவு செய்த நாள்
15
நவ
2012
10:11
திருத்தணி:முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா கொடி ஏற்றத்துடன் நேற்று துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி மறுநாள் கந்த சஷ்டி விழா துவங்கி, ஐந்து நாட்கள் லட்சார்ச்சனையும், ஆறாவது நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கும். இதன்படி, நேற்று காலை 9:00 மணிக்கு கந்த சஷ்டி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மூலவர் முருகப் பெருமானுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.கல்யாண உற்சவம் இன்று, காலை 10:00 மணிக்கு மூலவருக்கு பட்டு அலங்காரமும், நாளை மூலவருக்கு சந்தானக் காப்பு அலங்காரம், 17ம் தேதி மூலவருக்கு திருவாபரண அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் மலைக் கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை விழா மற்றும் தீபாராதனை நடக்கிறது. வரும், 18ம் தேதி காலை 10:00 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு காவடி மண்ட பத்தில், சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான, 19ம் தேதி காலை 11:00 மணிக்கு கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவை ஒட்டி, தினமும் மாலை 5:30 மணிக்குமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், கோவில் உட்பிரகாத்தில் முருகன் வீதி உலா, மாலை, 6:30 மணிக்கு நடைபெறுகிறது. வரும், 18ம் தேதி மாலை, 6:00 மணிக்கு சஷ்டி அபிஷேகமும், அதை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பொன்னேரி: பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் அமைந்து உள்ள, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு, 86ம் ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை வைபவம் நேற்று முன்தினம் துவங்கியது. லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, மூலவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சந்தனக் காப்பும் நடந்தது. அலங்கார மின்விளக்குகளில் உற்சவ பெருமான் வள்ளி தேவசேனாவுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இம்மாதம், 18ம் தேதி வரை ஆறு தினங்கள் காலை மாலை லட்சார்ச்சனை விழாவும், 19ம்தேதி மாலை,7:00 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாண வைபவமும், 9:00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவிலில், முருகன் சன்னிதியில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. சொராக்காய்பேட்டை சிவன் கோவிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.அதே போல், ஆர்.கே.,பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா முன்னிட்டு, நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.