தொண்டி; தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகமது தர்கா, மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூலை 11 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 3:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, மானவநகரி கிராமத்திலிருந்து புறப்பட்டது. மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் ஸ்தானிகன்வயல் வழியாக சென்று அதிகாலை 4:30 மணிக்கு பாசிபட்டினம் சென்றடைந்தது. அங்கு தர்காவை மூன்று முறை வலம் வந்து தர்கா முன்பு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடந்தது. சந்தன பிரசாதத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் கலியநகரி, வட்டாணம், ஸ்தானிகன்வயல், எஸ்.பி.பட்டினம், மருங்கூர் உள்ளிட்ட 17 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தர்கா வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.