பதிவு செய்த நாள்
22
ஜூலை
2024
05:07
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கடுக்காபட்டி தென்மலை கருப்புசாமி கோயிலில் நடந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி அன்னதான விழா நடந்தது.
கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடுக்காபட்டி தென்மலையில் அமைந்துள்ளது ஆண்கள் மட்டுமே வழிபடும் கருப்புசாமி கோவில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா கிடாவெட்டி சாமிக்கு படையல் இடப்பட்டு அசைவ அன்னதான விழா நடைபெறும். இக்கோவில் சிறுமலை தொடர்ச்சி தென்மலை உச்சியில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தும் இருசக்கர வாகனங்கள் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே செல்ல முடியும். இக்கோவிலில் வழிபாடு நடத்த ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது பெண்கள்(சாமி தரிசனம்) வழிபாடு செய்ய அனுமதி இல்லை. விருந்தில் பங்குபெற மட்டுமே பெண்களுக்கு அனுமதி. (விருந்து கோவிலிலிருந்து சற்று தொலைவில் நடைபெறும்) மலை உச்சியில் அமைந்துள்ள கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அதிகாலை வேளையில் 20க்கும் மேற்பட்ட கிடாய்கள், 50க்கும் மேற்பட்ட கோழிகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டது. பின்னர் காட்டுப்பகுதியிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் சமைத்து அதிகாலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, துணைத் தலைவர் ராசு, அ.தி.மு.க., நிர்வாகிகள் செடிப்பட்டி ஆண்டிச்சாமி, சின்னச்சாமி உள்ளிட்ட அய்யாபட்டி , பெருமாள்கோவில்பட்டி, செடிப்பட்டி,கடுக்காபட்டி, கோம்பைப்பட்டி, சரளப்பட்டி, மலைப்பட்டி, வேம்பாரப்பட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.