நயினார்கோவிலில் பாதுகாப்பற்ற சூழலில் அம்பாள் தேர்; புராதானத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 06:07
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள அம்பாள் தேர் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புராதானத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய பெருமை பெற்றதாகும். இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த நிலையில், அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை முதலில் நாகநாத சுவாமிக்கு எடுத்து வைப்பது வழக்கம். இதன்படி இக் கோயிலுக்குட்பட்ட உப கோயில் பலவற்றிற்கும் வருமானம் கொடுக்கிறது. இந்நிலையில் ஆடி மாத விழாவில் அம்பாள் அமர்ந்து செல்ல கோ ரதம் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரதம் 8 மாதங்களுக்கும் மேலாக அம்பாள் சன்னதி முன்பு தெருவில் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் நிறுத்துவதற்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த இடம் இடிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர் நிறுத்தம் பகுதியில் குப்பைகள் கொட்டி அசுத்தமான சூழலில் அவ்வப்போது தீ வைக்கின்றனர். ஏற்கனவே வெயில், மழையில் சேதம் அடைந்து வரும் தேர், தீ விபத்தில் சிக்கும் சூழலில், ஒட்டுமொத்தமாக உருக்குலையும் அபாயம் உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். வரும் வாரங்களில் ஆடி தேர் திருவிழா ஆரம்பிக்க உள்ள சூழலில் உடனடியாக தேரை சீரமைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.