பதிவு செய்த நாள்
24
ஜூலை
2024
05:07
சேலம் ; ஆத்தூர் அருகே நடுவலூர் கிராமத்தில் உள்ள அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பின் தேர்த் திருவிழா நடந்தது.
நடுவலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் காட்டுப்பகுதியில் அருங்காட்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெரியம்மன், சின்னம்மன் சுவாமிகள் உள்ளன. தேர் விழா காலங்களில் ஊர் நடுவில் உள்ள கைலாசநாதர் கோயிலில், பெரிய அம்மன், சின்ன அம்மன் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி 2004ம் ஆண்டு விழாவின் போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, திருவிழா நிறுத்தப்பட்டது. விழாவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் செல்லாமல், வெளியே வைக்கப்பட்டுள்ள சுவாமிகளை வழிபட்டு வந்தனர். 21 ஆண்டுகளாக விழா நடைபெற வில்லை. தற்போது, தாசில்தார் தலைமையில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்து விழா நடத்துவோம் என ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த 19ம் தேதி விழா சிறப்பாக துவங்கியது. இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அனைத்து சமூக மக்களும் சேர்ந்து தேரை வடம் பிடிக்க தேர் வீதி வலம் வந்தது. 21 ஆண்டுகளுக்கு பின் விழா விமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.