1200 ஆண்டுகள் சிதலமடைந்து கிடந்த சிவன்; சீரமைத்து பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 05:07
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலையில் 1200 ஆண்டுகள் சிதலமடைந்து கிடந்த சிவன் சிலையை சீரமைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கடந்த பாண்டியர் கால மன்னர் ஆட்சியின் போது மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு மன்னர்கள் மற்றும் யாத்திரீகர்கள் பாதயாத்திரையாக செல்லும் போது வழியில் ஆங்காங்கே சிவன் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்தக் காலகட்டத்தில் மானாமதுரை மேலப்பசலை அருகே சிவன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அவ்வழியாக சென்ற மன்னர்கள் யாத்திரீகர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காலப்போக்கில் அந்த கோயில் சிதலமடைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவன் சிலை தரையில் மண்ணுக்கு அடியில் பாதியளவு புதைந்திருந்தது.இதனை இப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் மேலப்பசலை கிராம மக்கள் பார்த்து சிவன் சிலையை மேலே தோண்டி எடுத்து வைத்து அப்பகுதியில் வழிபாடு செய்து வந்த நிலையில் மேலப்பசலை கிராம மக்கள் மற்றும் கோவையை சேர்ந்த அரண் பணிக்குழுவினர் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தற்போது அந்த இடத்தில் கோயில் அமைத்து சிலைகளுக்கு பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து சிவனுக்கு பழமலை நாதர் எனவும் அம்மனுக்கு பெரியநாயகி எனவும் பெயர் சூட்டி அபிஷேக, ஆராதனைகள், பூஜைகளை நடத்தி வருகின்றனர்.தற்போது 48 நாட்களுக்கு தொடர்ந்து மண்டல பூஜைக்காக தினம் தோறும் பூஜை நடைபெற்று வருகிறது. பூஜைகளில் மேலப்பசலை கிராம மக்கள் மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.