பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
05:07
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில், வண்டிபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கங்கையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்த, கிராம மக்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, வண்டிபாளையத்தம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 9:30 விரதமிருந்த பக்தர்கள் தீ மித்தனர். தொடர்ந்து, வண்டிபாளையத்தம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. இதில், கருநிலம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றபர்.
கூழ் வார்த்தல்; அச்சிறுபாக்கம் அடுத்த புதுப்பேட்டையில், செல்லியம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. ஆடி முதல் வெள்ளி கிழமையில், காப்பு அணிவித்து, ஊருணி பொங்கல் வைத்து வழிபட்டனர். காப்பு அணிந்த பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் சுமந்து, மூன்று நாட்கள் வீதி உலா வந்தனர். பின், முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 3:00 மணியளவில், கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மின் அலங்காரத்துடன், சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில், அம்மன் திருவீதி உலா நடந்தது.