பதிவு செய்த நாள்
15
நவ
2012
03:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடந்த கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமா னும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீ ர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். இதனை நினைவுக்கூறும் வகையில் வருடம் தோறும் ஐப்பசி மாதத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி துலா உற்சவம் தொடக்க தீர்த்தவாரியும் , 28ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், கடந்த 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், நேற்று (14ம்தேதி) தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து (15ம்தேதி) கடைமுக தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வாதானேஸ்வரர் சுவா மி ஆகியவை பஞ்ச மூர் த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் மதியம் 1 மணிக்கு காவேரி துலாக்கட்டத் தில் எழுந்தருளினர். அங்கு சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து மதியம் 1.25 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி தீர்த்தம் கொடுத்த போது காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை மீனாட்சிசுந்தரம் தம்பிரான், நாகை கலெக்டர் முனுசாமி, எம்.எல்.ஏ.அருட்செல்வன், நகராட்சி தலைவர் பவானிசீனிவாசன், தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி, ஏ.வி.சி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் செந்தில்வேல், கவுரவ மேலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடைமுக தீர்த்தவாரியையொட்டி மயிலாடுதுறை டி.எஸ்.பி. மாணிக்கவே ல் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகம் உள்ளுர் விடுமுறை விட்டிருந்தது.