பதிவு செய்த நாள்
16
நவ
2012
10:11
கார்த்திகை பிறந்துவிட்டால் "சுவாமியே சரணம் ஐயப்பா! என்ற பக்திகோஷம் எங்கும் கேட்கத் தொடங்கிவிடும். கார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து மண்டல விரதம் தொடங்குவர். 41நாட்கள் விரதமிருந்து யாத்திரை மேற்கொள்வர். பனிக்காலமான இப்பருவத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளும் போது உடல்வலிமை பெறுகிறது. விரதகாலத்தில் கருப்பு, காவி ஆடைகளை உடுத்தி எளிமை யையும், சமத்துவத்தையும் பின்பற்றுவர். மலை, ஆறு, காடு என்று இயற்கையோடு இணைந்து, உடல்ரீதியாகப் புத்துணர்வும் பெறுவர். ஹரிஹரபுத்திரனான ஐயப்பன் புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்று மஹிஷி என்னும் அரக்கியை வதம் செய்தார். அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் கோயில் கொண்டார். அவரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் உடலாலும், உள்ளத்தாலும் தூய்மை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவர்.
கார்த்திகையில் கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை தீபத்திருவிழா. இந்த ஆண்டு நவ.27ல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இந்த விழா நடக்கிறது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சிவனருள் வேண்ட சோமவார விரதம் மேற்கொள்வர். சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து சோமன் என்னும் பெயரும், சிவனின் தலையில் இருக்கும் பாக்கியமும் பெற்றான். இந்த விரதம் இருப்போர் திங்கட்கிழமை அதிகாலையில் நீராடி, சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அந்தண தம்பதியரை வீட்டுக்கு அழைத்து சிவபார்வதியாக பாவித்து வழிபாடு நடத்துவர். அவர்களுக்கு உணவளித்த பின் உண்பர். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்துவது வழக்கம். 108 அல்லது 1008 சங்குகளை சிவலிங்கம் போல அடுக்கி வைத்து இதனைச் செய்வர். சங்காபிஷேகம் செய்தால் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். புதுமணத்தம்பதிகள் இந்நாளில் சுவாமி தரிசனம் செய்தால், காலமெல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.