பதிவு செய்த நாள்
16
நவ
2012
10:11
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர், கோயில் பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து அறநிலைய துறை, துறை ரீதியான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலைய துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
* கோயில் மற்றும் கோவில் சார் இடங்களில், எளிதில் தீப்பற்றும் கீற்று கொட்டகைகளோ, பந்தல்கள், அலங்கார பணிகளோ அமைக்கப்படக் கூடாது.
* தீப்பிடிக்காத தகரம், இரும்புக் குழாய் உள்ளிட்டவை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
* திருப்பணி செய்யும் போது, ராஜகோபுரம், விமானம் மற்றும் இதர இடங்களில் அமைக்கப்படும் சாரங்கள், தீப்பிடிக்காத பொருட்களால் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்
* கோயில் வளாகத்தில், தீப்பெட்டி, பீடி, சிகரெட் போன்ற பொருட்களை பக்தர்கள் எடுத்து வருவதை, தடை செய்ய வேண்டும்.
* கோயில் வளாகம் மற்றும் கோயில் சார் கட்டடங்கள் ஆகியவற்றில் உள்ள, மின் இணைப்புகள் முறையாக உள்ளனவா என்பதை உடனடியாக சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்
* சிறு மின்கம்பிகள் கொண்டு, ஒட்டு போடுதல் கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் ஒட்டு போடும் போது, "இன்சுலேசன் டேப் சுற்றப்பட வேண்டும்.
* மின்கம்பிகளில், குண்டூசி போன்றவை மூலம் மின்சக்தியை பகிர்மானம் செய்ய கூடாது.
* சூடம் ஏற்றுவதை தவிர்க்க முயல வேண்டும். முடியாத போது, குறைந்த தரமான அளவு சூடங்கள் மட்டுமே கோயில்களில் பயன்படுத்த வேண்டும்.
* அய்யப்ப பக்தர்களால் தரமற்ற சூட விற்பனையாளர்களிடம் வாங்கப்படும் பெரும் கட்டிகளாக உள்ள சூடம், ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இவைகளை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். தரமற்ற சூடம் விற்பனையை, தடை செய்ய உரிய துறை அ<லுவலர்களுக்கு தாக்கீது அனுப்பி, தடை செய்ய கோர வேண்டும்.
* மடைப்பள்ளி, பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், அன்னதான கூடங்கள் ஆகியவற்றில் எரிவாயு இணைப்புகள், கசிவுகள் இல்லாமல், அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். தேவையான கால இடைவெளியில் இணைப்பு குழாய்களை மாற்றம் செய்ய வேண்டும்.
* விறகு அடுப்பு உள்ள இடங்களில், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும்.
* தேவையான இடங்களில், தேவையான அளவு தீயணைப்பான்கள் நிறுவப்பட வேண்டும். தீயணைப்பான் இயங்கும் முறை குறித்து, சம்பந்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
* தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ள இடங்களில், புகை கண்டறியும் கருவியை உடனடியாக பொருத்த வேண்டும்.
* கோயில் வளாகம் மற்றும் கோயில் இடங்களில் தேவையற்ற பொருட்களை ஆங்காங்கு வைத்திருப்பதை உடனடியாக அகற்றி, பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
* கோயில் பணியாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் உயர்நிலை அ<லுவலர்கள் அவ்வப்போது, கோவில்களை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற அனைத்து நிலை செயல் அலுவலர்கள், அறங்காவலர்கள், தக்கார் மற்றும் தற்காலிக நிர்வாகிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: மேலும், அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட நிலை உதவி ஆணையர்கள், ஒழுங்கு முறை கட்டளைகள் பின்பற்றப்படுகிறதா என, கண்காணித்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. களப்பணியில் உள்ள ஆய்வாளர்கள், கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறும் அலுவலர்கள் மீது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், செயல்படுத்த தவறும் அதிகாரிகள் இழப்புக்கு பொறுப்பாகவும் நேரிடும் எனவும், இந்து சமய அறநிலைய துறை எச்சரித்து உள்ளது.