பதிவு செய்த நாள்
16
நவ
2012
10:11
சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவில், இந்தாண்டு முதல், வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில் வரும், 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 27ம் தேதி மகா தீபத்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது தீபமும் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண கோவிலில், 17 ஆயிரம் முதல், 20 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், ஒரு நிமிடமே வந்து நடனமாடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும், அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டு, அதே நேரத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வர் ஆகியோரை தரிசனம் செய்து மகா தீபத்தை காண முடியும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டி போடுவர். இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க, இது வரை ஆண்டுதோறும் கோவில் உள்ளே செல்ல பாஸ் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. கோவில் உள்ளே எவ்வளவு பக்தர்கள் செல்ல முடியுமோ அதே அளவுக்கு சாதாரண பிரமுகர்கள் செல்ல அட்டை பாஸ், வி.ஐ.பி.,க்கள் செல்ல பேட்ஜ்ம் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல், பேட்ஜ் முறையை ஒழித்துவிட்டு, முதலில் வரிசையில் நின்று யார் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். இதன் மூலம், சாதாரண பக்தர்களும் கோவிலினுள் சென்று, அர்த்தநாரீஸ்வரரை வழிபட முடியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதில், சாதாரண பக்தர்கள் கோவில் உள்ளே வர, கிழக்கு கோபுரமான ராஜ கோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலக உயர் அதிகாரிகள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். அதிகாரிகள், தீபத்திருவிழா கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், அனைவரும், வடக்கு கோபுரமான அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ராஜ கோபுரம் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வர வசதியாக, கம்பியிலான தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடக்கிறது.