வவ்வால்களின் குடியேற்றத்தால் துர்நாற்றத்தில் நயினார்கோயில் நாகநாத சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2024 07:08
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலையில், வவ்வால்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தாமல் அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏராளமான ஆன்மீக தலங்கள் நிறைந்துள்ளன. இதன்படி தீர்த்த ஸ்தலமான ராமேஸ்வரம் உட்பட, தோஷ நிவர்த்திக்கு சவுந்தர்ய நாயகி அம்பாள், நாகநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை இருக்கும் நிலையில், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு நேர்த்திக் கடனை செலுத்துவர். கோயில் முழுவதும் பராமரிக்கப்படாமல் மின்விளக்குகள் இன்றி, போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக நாயன்மார்கள் சன்னதி, தட்சிணாமூர்த்தி மற்றும் பிரதான நேர்த்தி கடன் செலுத்தும் இடமாக உள்ள புற்றடி ஆகிய இடங்களில் வவ்வால்கள் மண்டபத்தில் ஏராளமாக அடைந்துள்ளன.
இதனால் வவ்வால்களின் எச்சம் மண்டபம் முழுவதும் மற்றும் சுவாமி சிலைகளின் மீதும் படிந்து வருவதால் பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது. மன அமைதி வேண்டி மற்றும் தோஷ நிவர்த்திக்கு செல்லும் பக்தர்கள் இது போன்ற நிலையால் மனம் புண்படும்படி உள்ளது.
ஆண்டு முழுவதும் பக்தர்களின் காணிக்கை குவியும் இக்கோயில் அதிகாரிகளின் பாராமுகத்தால், பல்வேறு பகுதிகளும் சிதலமடையும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மவுனம் கலைந்து கோயிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.