கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி ஜடா முனிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48வது நாள் மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கே.அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோயிலில் கடந்த ஜூன்.16 கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் ஜடா முனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மண்டல பூஜை தொடர்ந்து அதிகாலை கோவில் முன் உள்ள யாக சாலையில் கோ பூஜை, விநாயகர் ஹோமம், கங்க பூஜை, சுவாமி அபிஞஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது மூன்றிற்கும் மேற்பட்ட கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தார்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜையை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.இதில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி, கோம்பைப்பட்டி, நத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று கிடாய் வெட்டி அன்னதானம் நடைபெறும். இதில் ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகை சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.