மயிலாடுதுறையில் வறண்ட காவேரியில் வருத்தத்துடன் ஆடிப்பெருக்கு பூஜை செய்த மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2024 08:08
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால் கலை இழந்த ஆடிப்பெருக்கு விழா, கொள்ளிடம் ஆற்றின் வழியே ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கடலுக்குள் சென்று வரும் நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திருப்பி விடாத காரணத்தால் வறண்ட காவேரி வருத்தத்தில் பொதுமக்கள் கொண்டாடினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தெய்வமாக நினைத்து வழிபடும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை கன்னிப் பெண்ணாக நினைத்து ஆடிப்பெருக்கு தினத்தன்று பொதுமக்கள் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் காதோலை கருகமணி கண்ணாடி வளையல் நாவல் பழம், பேரிக்காய் விளாங்காய் ஆகியவற்றுடன் அச்சு வெல்லம் காப்பரிசி கலந்து வைத்து ஆற்றங்கரையில் காவிரி மண்ணை பிடித்து தூப தீபங்கள் காட்டி மாங்கல்ய பலம் வேண்டி தாலியை வணங்கி, ஆற்றில் தீபம் விடுவது வழக்கம். இயற்கையின் கருணையால் கர்நாடகாவில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒன்றரை லட்சம் கன அடி மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நிலையில் காவிரி கடலுடன் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு கொண்டாட தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் மயிலாடுதுறை மக்கள் ஆற்றை சுத்தப்படுத்தி காத்திருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று சேர்ந்து வரும் நிலையில் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு கதவணை பகுதிக்கு இன்று மாலைக்கு மேல் தான் தண்ணீர் வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள புஷ்கர தொட்டியில் போர் மூலம் தண்ணீர் நிரப்பி அதில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். அருகில் உள்ள கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது ஆனால் எங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும் என்று பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.