பதிவு செய்த நாள்
03
ஆக
2024
10:08
தஞ்சாவூர், - தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டபத்துறை, காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் என அனைவரும் புனித நீராடி பழங்கள், காதோலை கருகமணி, மாங்கல்யம் உள்ளிட்டப் பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர்.
பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆகையால் விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று, காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தினர். சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி, தீபாராதனை காண்பித்து பின்பு பழம், அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். மேலும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அந்த நீரால் தானியங்களை தூவி நீருக்கும் நன்றி செலுத்தினர்.
இதை போல, தஞ்சாவூரில் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடினர். சிலர் தங்களது வீடுகளில் உள்ள குடிநீர் குழாய், கிணறு ஆகிய இடங்களில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.