பதிவு செய்த நாள்
03
ஆக
2024
10:08
சிவகாசி; சிவகாசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கோயில் வளாகம் துர்நாற்றம் ஏற்படுவதாலும், வடக்கு வாசல் திறக்கப்பட்டும் வாகனங்களால் மறைக்கப்பட்டதாலும் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
சிவகாசி விஸ்வநாதர் கோயில் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் 16 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் சிவாலயம் கட்டுவதற்காக காசியில் சிவலிங்கம் எடுத்து கங்கையில் நீராடி தென்காசிக்கு எடுத்து வந்த போது, வில்வ வனத்தில் தங்கிய போது, சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு, மேற்கொண்டு செல்ல மறுத்ததால், அந்த இடத்திலேயே காசி விஸ்வநாதருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார்.
காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்து கோயில் கட்டியதால் அந்த இடம் சிவகாசி எனப் பெயர் பெற்றது. இங்கு சிவன் விஸ்வநாதராகவும், பார்வதி தேவி விசாலாட்சியாகவும் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஏப். 26 ல் நடந்து முடிந்தது.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் துர்நாற்றம் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சிவ பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். கோயில் உள் நுழைந்தவுடன் பக்தர்கள் உட்கார்வதற்காக அமைக்கப்பட்ட திண்ணையில் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ளே கன்னிமூல கணபதி சுவாமி அருகே சுவாமி ஊர்வலமாக வரும் வாகனங்கள் பாதுகாப்பாக அமைப்பதற்காக செட் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாகனங்கள் அங்கே வைக்கப்படாமல் 90 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட வடக்கு வாசலை மறைத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளிருந்த தெப்பத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் இதில் இருந்த மீன்கள் பெரும்பான்மையானவை இறந்து விட்டன. கோயில் வாசலில் பாதுகாப்பு இல்லாத நிலையில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் உரிய இடத்தில் விளக்கு ஏற்றாமல் கண்ட இடங்களில் விளக்கு ஏற்றுவதால் ஆங்காங்கே எண்ணெய் படிந்து காணப்படுகிறது.
மேலும் கோயிலுக்குள் 63 நாயன்மார்களின் சிலைகள் உள்ளது. வருகின்ற பக்தர்கள் தங்களது ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப நயன்மாரை வழிபடுவர். ஆனால் கோயில் புனரமைப்புக்கு பின்னர் நயன்மார்களின் பெயர்கள் எழுதவில்லை. இதனால் வருகின்ற பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். உள்ளே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகம் வீணாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பையும் அகற்றப்படாமல் உள்ளது. வடக்கு வாசலில் அமைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உபயதாரர்களால் புனரமைக்கப்பட்ட கோயில், தற்போது அலங்கோலமாக காட்சியளிப்பதால் உபயதாரர்கள், சிவ பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
சிவ செல்வராஜ், சிவபக்தர், பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் சிவகாசி மக்களின் காவல் தெய்வமாக பார்க்கப்படுகின்றது. கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், தினமும் பூஜை நடந்து வருகின்றது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மன நிம்மதிக்காக வருகின்ற பக்தர்கள் கோயிலின் அவல நிலையால் மன நிம்மதியின்றி செல்கின்றனர். கோயிலின் முன்பாக பாதுகாப்பற்ற நிலையில் தேர் உள்ளது. இதற்கு பாதுகாப்பு கொட்டகை அமைக்க வேண்டும். கோயில் தெப்பத்தில் உள்ள நீரை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
ரேவதி, செயல் அலுவலர், உரிய இடங்களில் விளக்கு ஏற்றுவதற்கு பக்தர்களிடம் அறிவுறுத்தப்படும். இதற்கு பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேரினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு கொட்டகை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற பக்தர்கள் பொரி உள்ளிட்டவைகளை தெப்பத்தில் போடுவதால் அதன் சூழல் மாறுபடுகிறது. அவ்வப்போது தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் பிரம்மோற்சவ விழா நடந்ததால் சுவாமி வாகனங்கள் வடக்கு வாசல் அருகே நிறுத்தப்பட்டது. உரிய இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்படும்.