பதிவு செய்த நாள்
04
ஆக
2024
11:08
பல்லடம்; யாகத்தை பார்த்தாலே புண்ணியம் என, பல்லடம் அருகே நடந்த ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு யாகத்தை துவக்கி வைத்து அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் பேசியதாவது: எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும். கவலை இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. அப்படிப்பட்ட கவலைகளை தீர்ப்பவள்தான் காளீஸ்வரி. தர்மத்துக்கு விரோதம் இல்லாத வகையில், நாம் கேட்கும் வரங்களை கொடுப்பவள் அம்பாள். ஆனால், வரங்களைக் கேட்க நாம்தான் தயாராக இல்லை. யாகத்தை பார்த்தாலே புண்ணியம் என்று கூறுவார்கள். அதிலும், காளியின் யாகத்தில் பங்கேற்பதால் அனைத்து வித பாவங்களும், தோஷங்களும் விலகும். பயம், ஏவல், பில்லி, சூனியம் என, அனைத்து வித பிரச்னைகளையும் நீக்கி நம்மை தாப்பவள்தான் பத்ரகாளி. அன்னையை வழிபட்டால் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்றார். முன்னதாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் பவர் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதனையடுத்து, வரமிளகாய் கொண்டு செய்யப்படும் நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.