ஆடி அமாவாசை; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2024 11:08
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அமாவாசை நாளை முன்னிட்டு சிவாலயத்தில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் தோஷங்களை கழிக்க வந்திருந்தனர். இதனையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்று வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்து காட்சியளித்தது. அதில் ஒரு சிலர் பக்தர்கள் கோவில் ராஜகோபுர நுழைவாயில் முன்பாகவும், தீபஸ்தம்பத்தின் அருகிலும் தங்களது செருப்புகளை கழட்டி விட்டு சென்றனர். இதனால், கோவில் வெளி பிரகாரம் முழுவதுமாக ஆங்காங்கே செருப்புகள் சிதறி அலங்கோலமாக காட்சியளித்தது. இதனால், ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பலரும் மனம் வருந்தினர்.
பக்தர்கள் கூறும்போது, செருப்புகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு என தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது . கோவில் ஊழியர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் தங்களது செருப்புகளை உரிய அறையில் விட்டு டோக்கன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கோவில் வளாகம் தூய்மையாகவும் தெய்வீகமாகவும் காட்சியளிக்கும் என்றனர்.