பதிவு செய்த நாள்
04
ஆக
2024
11:08
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில், ஆயிரக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி கோவிந்தம்பிள்ளை மயானத்தில், பவானி ஆற்றின் கரையோரம், அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் உள்ளது. இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுகள், தினமும் நடைபெற்று வருகின்றன. நந்தவனத்தில் மயானமும், மேலே சிவன் கோவிலும், கீழே பவானி ஆறும் உள்ளது. காசிக்கு இணையாக இந்த நந்தவனம் உள்ளது. அதனால் ஏராளமான மக்கள் திதி கொடுக்க வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, மாஹாளய அமாவாசை ஆகிய இரண்டு நாட்கள், அதிகமான மக்கள் வந்து, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, திதி கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டுப்பாளையம் நந்தவனத்திற்கு வந்தனர். அதிகாலை 4:00 மணியிலிருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நந்தவனத்தில் இருந்து, ஊட்டி ரயில்வே கேட் வரை, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது குறித்து அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சல குமார் ஆகியோர் கூறியதாவது: நந்தவனத்தில் வழக்கமாக, 13 புரோகிதர்கள் உள்ளனர். இவர்கள் நந்தவனத்திற்கு வரும் மக்களுக்கு திதி மற்றும் கர்ம காரியங்களை செய்து வருகின்றனர். இதற்கு கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யவில்லை. மக்கள் விரும்பி கொடுக்கும் தொகையை பெற்றுக் கொள்ள, புரோகிதர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு நந்தவனத்தில் கூடுதலாக, 20 புரோகிதர்கள் நியமித்து மொத்தம், 33 புரோகிதர்கள் அமர்ந்து புரோகிதம் செய்ய, தேவையான அடிப்படை வசதிகளும், மக்கள் வரிசையாக செல்வதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. உடல் ஊனமுற்றோர் தனியாக திதி கொடுக்க வசதி செய்யப்பட்டது. மேலும் முதலுதவி மையம், ஆம்புலன்ஸ் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு டீ, பிஸ்கட், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆற்றில் மக்கள் இறங்காமல் இருக்க, தடுப்புகள் அமைத்து இருந்தோம். மக்களை வரிசைப்படுத்தி, வழிகாட்டும் பணியில், அனைத்து இந்து சமுதாய நந்தவன சங்கத்தினர், 100 பேர், தன்னார்வப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை, 4:00 மணியிலிருந்து, மதியம், 3:00 மணி வரை, 10,000க்கும் மேற்பட்டவர்கள் திதி கொடுத்தனர். நந்தவனம் வந்த அனைவருக்கும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.