பதிவு செய்த நாள்
10
ஆக
2024
11:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல், அர்ச்சகர் கோவிலை பூட்டிச் சென்றார். அன்றிரவு பூட்டை உடைத்து, 2 அடி உயரம் உள்ள பித்தளையால் ஆன சிவன் சிலையும், ஒன்றரை அடி உயரம் உள்ள பார்வதி சிலை மற்றும் செம்பு தவளை ஆகியவற்றை திருடிச் சென்றனர். திருடுபோன சிலைகள், கடந்த 2012ல், உபயதாரர் ஒருவரால் கோவிலுக்கு செய்து கொடுக்கப்பட்டது. இச்சிலைகள் திருடுபோன தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி தலைமையில், சிவகாஞ்சி ஆய்வாளர் ஜெயவேல் உள்ளிட்ட போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரித்து வந்தனர். ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதன் வாயிலாக, காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்த குமரேசன், 42, மற்றும் சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, ஆகிய இருவரும், சிலைகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் பிடித்து விசாரித்ததில், சிறுகாவேரிப்பாக்கம் முனீஸ்வரன் கோவில் அருகேயுள்ள தண்ணீர் குட்டையில், சிலைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரு சிலைகள் மற்றும் செம்பு தவளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.