பதிவு செய்த நாள்
10
ஆக
2024
02:08
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேற்று நிறைவடைந்தது. 4 வது வாரத் திருவிழா இன்று நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் உரிமை தொடர்பாக பரம்பரை அறங்காவலர்களுக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது . ஐகோர்ட்டில் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வலியுறுத்தி அறங்காவலர்கள் உத்தரவு பெற்றனர். அந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத் துறை அப்பீல் செய்துள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த திருவிழா இந்தாண்டு ரத்து செய்வதாக அறநிலையத்துறை அறிவித்திருந்தது. திருப்பணி நடைபெறுவதால், திருவிழா நடத்தவில்லை என்று கூறியது இந்த முடிவை எதிர்த்து கம்பம் முத்துக் குமரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கொடியேற்றம், சுவாமி புறப்பாட்டை தவிர்த்து வழக்கம் போல திருவிழா நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஜூலை 20 ல் திருவிழா துவங்கியது. அதன் பின் ஜூலை 27, ஆக . 3 என மூன்று சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெற்றது. மூன்றாவது வாரம் பெருந் திருவிழாவாகும். ஆடிப் பெருந்திருவிழாவின் கடைசி வாரத் திருவிழா இன்று ( ஆக 10 ) காலை நடைபெற்றது. , தேனி மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். சுரபி நதியில் குளித்து விட்டு விநாயகரை வணங்கி, பின் காக்கை வாகனம் வாங்கி வைத்தல், எள் தீபமேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். இந்த திருவிழாவில் கொடியேற்றம், திருக்கல்யாணம், முளைப்பாரி ஊர்வலம், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் கடந்த 4 சனிக்கிழமைகளிலும் நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை செய்திருந்தது.