பத்தாண்டுகளுக்கு பின் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 10:08
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருசமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் பூட்டப்பட்ட முத்தாலம்மன் கோயில் பத்தாண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பூஜை நடத்துவதற்காக இன்று திறக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம் என கருத்து தெரிவித்த உயர்நீதி மன்றம், கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று காலை 8:00 மணிக்கு உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில் குமார் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கோயிலைத் திறந்து சுத்தப்படுத்தும் பணியில் ஒரு பிரிவினர் ஈடுபட்டனர். அப்போது மாற்று சமூகத்தினர் எங்களையும் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் (ஆக.12) இன்று காலை 11:00 மணியளவில் சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப்படும் என போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.