பதிவு செய்த நாள்
13
ஆக
2024
10:08
பெங்களூரு: கர்நாடகாவில் இந்தாண்டு நல்ல மழை பெய்திருப்பால், தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது, என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். கர்நாடகாவில் மாநில அரசால் கொண்டாடப்படும் மிக பெரிய திருவிழா என்றால், அது தசரா விழா தான். உலக பிரசித்தி பெற்ற இந்த விழாவை, இந்தாண்டு கொண்டாடுவது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், மஹாதேவப்பா, ஜார்ஜ், வெங்கடேஷ், மைசூரு, மாண்டியா, குடகு, சாம்ராஜ்நகர், ஹாசன் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்; இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்தது. யாரை வைத்து துவக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இறுதி செய்யவில்லை. திறப்பு விழா சிறப்பு விருந்தினரை தேர்வு செய்யும் அதிகாரம், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது: வறட்சியின் காரணமாக, கடந்தாண்டு தசரா விழா பாரம்பரியத்துடன் மட்டுமே கொண்டாடப்பட்டது. இம்முறை மாநிலம் முழுதும் நல்ல மழை பெய்துள்ளது. பெரும்பாலும் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இந்தாண்டு தசரா விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு விழாவுக்கு, 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தாண்டு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதால், தேவைக்கேற்ப நிதி வழங்கப்படும்.
ஜம்பு சவாரி; ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, இடம் பெறும் அணிவகுப்பு ஊர்திகள் மிகவும் அர்த்தம் உள்ளதாகவும், நேர்த்தியாகவும், அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருக்கும். அக்டோபர் 3ம் தேதி காலை 9:15 மணிக்கு, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவுவதன் மூலம், தசரா விழா துவங்கப்படும். அதே நாளில், தசரா கண்காட்சியும் துவக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சாதனைகள், வாக்குறுதி திட்டங்கள் அடையாளப்படுத்தப்படும். வரும் 21ம் தேதி காலை 10:10 மணிக்கு, ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் யானைகளுக்கு பூஜை செய்து, காட்டில் இருந்து, தசரா விழாவுக்காக மைசூருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அக்., 12 வரை; அக்., 3ம் தேதி துவங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும். ஒன்பது நாட்களும் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விஜயதசமி நாளான அக்., 12ம் தேதி பகல் 1:41 மணி முதல் 2:10 மணிக்குள் நந்தி கொடிக்கு பூஜை செய்து, ஜம்பு சவாரி ஊர்வலம் துவக்கி வைக்கப்படும். மாலை 4:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் சுமக்கும் கஜபடைக்கு மலர் துாவி வணங்கப்படும். சுற்றுலா பயணியரை கவரும் வகையில், நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்படும். கடந்தாண்டு ஒரு வாரம் விஸ்தரிக்கப்பட்டது. இம்முறை தசரா முடிந்த பின் 21 நாட்கள் வரை மின் விளக்கு அலங்காரம் விஸ்தரிக்கப்படும்.
உள்ளூர் கலைஞர்கள்; இம்முறை முன்கூட்டியே தங்க அட்டை பாஸ்கள் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி, கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். மைசூரை மையமாக வைத்து, கே.எஸ்.ஆர்.டி.சி., உதவியுடன் சுற்றுலா மையம் உருவாக்கப்படும். கலை நிகழ்ச்சிகள், பொருட்காட்சி, மின் விளக்கு அலங்காரம், உணவு திருவிழா, இளைஞர் தசரா, விவசாய தசரா, மல்யுத்தம் என அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் நேர்த்தியாக செய்யப்படும். உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர்பேசினார்.
14 யானைகள் பங்கேற்பு; பெங்களூரு ஜி.கே.வி.கே.,வில் நடந்த யானைகள் - மனிதர்கள் மோதல் தடுப்பது குறித்து சர்வதேச மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில், தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளின் பட்டியலை, கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ் ராஜன், ரமேஷ்குமார், மாலதிபிரியா ஆகியோர் வெளியிட்டனர்.இதன்படி, அபிமன்யூ, மஹேந்திரா, கோபி, பிரசாந்த், தனஞ்செயா, சுக்ரீவா, வரலட்சுமி, லட்சுமி, தொட்ட ஹரவே லட்சுமி, ஹிரண்யா, பீமா, கன்ஜன், ரோஹித், ஏகலவ்யா ஆகிய 14 யானைகள் தசரா விழாவில் பங்கேற்கின்றன.