திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2024 12:08
திருச்செந்துார்; திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயிலாக வெயிலுகந்தம்மன் கோயில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இந்தாண்டு ஆவணி திருவிழா நேற்று காலை
கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் வைபவம் துவங்கியது. அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் காலை 5:37 மணிக்கு சிவக்குமார் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடி மரம் தர்ப்பைபுல், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திருவிழா 10 நாட்கள் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. 10ம் திருநாளன்று காலை 5:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.